உங்கள் இணைய தளப் படங்களை பிறர் திருடாமலிருக்க செய்ய வேண்டியவை
பலரும் தங்களிடம் உள்ள தகவல்கள் மற்றும் அவை சார்ந்த படங்களை இணைத்து இணைய தளங்களை அமைக்கிறார்கள். ஆனால் இந்த தளங்களைப் பார்க்கும் நேயர்கள் இவற்றில் உள்ள படங்களை அப்படியே காப்பி செய்து தங்களுடைய விருப்பப்படிப் பயன்படுத்துகிறார்கள். சிலர் அவற்றை மற்றவர்களுக்கு விற்று விடுகிறார்கள். சிலரோ அவற்றைக் கீழ்த் தரமாகவும் பயன்படுத்துகின்றனர். இந்த திருட்டை எப்படித் தடுப்பது? இது குறித்த சில தகவல்களை இங்கு பார்ப்போம். இணைய தளங்களில் பொருத்தப்பட்டு காட்சியளிக்கிற படங்களை காப்பி செய்ய முடியாதவாறு தடுக்க சில வழிகள் உள்ளன. உங்கள் வழிகளை மீறி படங்களைச் சாதாரண பயனாளர்களால் காப்பி செய்ய முடியாது. ஆனால் கம்ப்யூட்டர் விற்பன்னர்களால் காப்பி செய்ய முடியும்.
ரைட்கிளிக் செய்வதை தடுக்க:
பொதுவாக ஓர் இணைய தளத்தில் உள்ள படத்தால் ஈர்க்கப்பட்டவர் அதை காப்பி செய்ய அதை ரைட்கிளிக் செய்வார். மெனு கிடைக்கும். அதில் Save Image As என்பதைப் போன்ற கட்டளை தெரியும். அதை கிளிக் செய்தால், அந்தப் படம் அவர் கம்ப்யூட்டரில் சேமிக்கப்படும். எனவே ஜாவாஸ்கிரிப்டை பயன்படுத்தி, ரைட்கிளிக் செய்தால் மெனு கிடைக்காதவாறு செய்து விட வேண்டும். மெனு கிடைக்காததால் Save Image As கட்டளையை அவரால் செயல்படுத்த முடியாது. ரைட்கிளிக் செய்யும் பொழுது கிடைக்கிற மெனுவில் வேறு நல்ல பயனுள்ள கட்டளைகளும் உள்ளன. எனவே ரைட்கிளிக்கால் கிடைக்கிற மெனுவைத் தடுத்துவிட்டால், அந்த நல்ல கட்டளைகளை உங்கள் இணைய தளத்துக்கு வருபவர்களால், உங்கள் வெப் தளத்தில் பயன்படுத்த முடியாமல் போய்விடும். எனவே அவர்களுக்கு எரிச்சல் ஏற்படும். மீண்டும் உங்கள் தளத்துக்கு வரமாட்டார்கள்.
வேறு படத்தை காப்பி செய்யும்படி ஏமாற்ற:
ரைட்கிளிக் செயலை ஜாவாஸ்கிரிப்ட் மூலம் தடுக்கக் கூடாது என்பதை ஒப்புக் கொள்வீர்கள் அல்லவா? Rollover என்ற ஜாவாஸ்கிரிப்ட் அம்சத்தை பயன்படுத்த வேண்டும். யாரும் காப்பி செய்யக் கூடாது என நீங்கள் நினைக்கிற படத்தை வெப் பக்கத்தில் காட்டுங்கள். மவுஸை அந்த படத்தின் மேல் கொண்டு சென்றால் வேறு படம் தெரியும்படி, ஜாவாஸ்கிரிப்டில் Rollover கட்டளையில் கூறிவிடுங்கள். எனவே உங்கள் வெப் பக்கத்தை பார்வையிடுபவருக்கு அந்த படம் தெரியும். ஆனால் அதை காப்பி செய்ய மவுஸை அதன் மேல் கொண்டு போனால் அந்த படம் மறைந்து வேறுபடம் காட்சியளிக்கும். எனவே ரைட் கிளிக் மூலம் காப்பி செய்தால் அந்த புதிய படம்தான் அவர் கம்ப்யூட்டரில் காப்பியாகும். எப்போதும் உங்கள் படம்தான் தெரிய வேண்டும் மவுஸைக் கொண்டு போனவுடன் வேறு படம் தெரியக் கூடாது என நினைத்தால் அதற்கும் வழி உள்ளது. Transparent Gif படத்தை உருவாக்கி கொள்ளுங்கள். பிறகு Embedded style sheet மூலம் அந்த Transparent Gif படத்தின் கீழே உங்கள் படத்தை வைத்து விடுங்கள். உங்கள் படத்தின் மேலே கண்ணாடி காகிதம்போல் Transparent Gif வீற்றிருப்பதால் யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படாது. ரைட்கிளிக் செய்து படத்தை காப்பி செய்கிறவர்களுக்கு கண்ணாடி காகிதமான Transparent Gif படமே காப்பியாகும். அதன் கீழேயுள்ள உங்கள் படம் காப்பியாகாது.
படத்தைத் துண்டுகளாக மாற்றி வெப் தளத்தில் போட:
ஒரு படத்தை அப்படியே உங்களது இணையப் பக்கத்தில் வைக்காதீர்கள். அதைப் பல துண்டுகளாகப் பிரித்து அந்த துண்டுகளை வெப் பக்கத்தில் அமைத்திடுங்கள். எனவே உங்கள் படத்தை காப்பி செய்ய விரும்புகிறவர் அந்த துண்டுகளையெல்லாம் காப்பி செய்து பின்பு ஏதாவது இமேஜ் எடிட்டிங் புரோகிராம் கொண்டு அவற்றை ஒட்ட வைக்க வேண்டும். இந்த எரிச்சல் பிடித்த வேலைக்கு பயந்து அந்த துண்டுகளை காப்பி செய்யாமல் விட்டுவிடுவார்கள்.
படத்தினுள் வாட்டர் மார்க்கை நுழைக்க:
படத்தை அப்படியே வெப் பக்கத்தினுள் கொண்டு வரக்கூடாது. அந்த படத்தின் உள்ளே உங்கள் பெயர் அல்லது வேறு ஏதாவது எச்சரிக்கைச் செய்தியை வாட்டர் மார்க்காக நுழைத்து விட வேண்டும். படத்துக்கு இடையூறு இல்லாமல் ஆனால் படத்தை காப்பி செய்பவர்களுக்கு அது பயன்படாதவாறுவாட்டர் மார்க் இருக்க வேண்டும். ஏதாவது இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் கொண்டு வாட்டர் மார்க்கை உருவாக்கலாம். யார் கண்களுக்கும் தெரியாத வாட்டர் மார்க்கை உருவாக்கலாம். இதற்கெனவே சில சாப்ட்வேர்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக Digimare (www.digimare.com) என்ற சாப்ட்வேர் மூலம் கண்ணிற்கு தெரியாத வாட்டர் மார்க்கை உங்கள் படத்தினுள் உருவாக்கலாம். வாட்டர் மார்க் தெரியாததால் எல்லாரும் உங்கள் படத்தை காப்பி செய்யலாம். ஆனால் அப்படி காப்பி செய்தவர்கள் மீது சட்டப்படி நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment