கணனி பாகங்களின் ஓர் அறிமுகம்
மதர்போர்டு (Mother Board):
CPUவில் எல்லா பாகங்களும் இணைக்கப்படும் அடிப்படையான சர்க்யூட் போர்டு. எல்லாவற்றிற்கும் தாய். தாயைப் போலவே ஊமையாக உழைக்க வேண்டும். கணனி தலைமைச் செயலகமான ப்ராஸஸர், பல்வேறு ப்ரோக்ராம்களை ஒரே சமயத்தில் திறக்க உதவும் மெமரி ஆகியவை இதன் மடியில் தான் தாலாட்டப்படுகிறது. உங்கள் கம்ப்யூட்டரைக் குறிப்பிடும் போது ப்ராஸஸர், ராம், ஹார்ட் டிஸ்க் பற்றியெல்லாம் பெருமையாக குறிப்பிடுவீர்கள். ஆனால் மதர் போர்டு?
மைக்ரோ ப்ராஸஸர்:
சுருக்கமாகச் சொன்னால் அரசன். முக்கியமான கணக்குகளைத் தானே போட்டு, எல்லாப் பாகங்களுக்கும் ஆணைகள் இட்டு செய்து முடிப்பவன்.
மெமரி (RAM):
ஓடிக்கொண்டிருக்கும் எல்லா ப்ரோக்ராம்களையும் ஞாபகத்தில் வைத்திருக்கும். அரசன் ஆணையிடும் போது தகவல்கள் அனுப்பும் மந்திரி.
ஹார்ட் டிஸ்க்:
கருவூலம் அல்லது நூலகம் என்று சொல்லலாம். இன்றைய விண்டோஸ் யுகத்தில் ஹார்ட் டிஸ்க் இல்லாத கணனி வைத்திருப்பவரை காதலி கூட சீண்ட மாட்டாள்! இதன் ஞாபகக் கொள்ளளவு ஒவ்வொரு இரண்டு வருடங்களில் இரட்டிப்பாவதாக கூறப்பட்டாலும். தற்போது அதைவிட வேகமாக கூடுவதாகத் தோன்றுகிறது.
கம்ப்யூட்டரில் உள்ள எல்லாப் ப்ரொக்ராம்களும் இந்த நூலகத்தில் தான் வைக்கப்படுகின்றது.
ப்ளாப்பி ட்ரைவ்:
ரொம்ப நாளாக (வருடங்களாக) கம்ப்யூட்டரில் மாறாமல் இருக்கும் ஒரே பாகம். உங்கள் கணக்குகளை கம்ப்யூட்டரிலிருந்து ப்ளாப்பியில் நகலெடுத்து பையில் வைத்துக் கொண்டு போகலாம். எல்லாக் கம்ப்யூட்டரிலும் போடும்படியாக இருக்க வேண்டும் என்பதால் இது மாறவே இல்லை. ஆனால் தற்போதைய அளவில் இதன் ஞாபகச் சக்தி மிகவும் குறைவு.
இதற்கு மாற்றாக 100MB கொள்ளளவு கொண்ட ஜிப் ட்ரைவ், MO டிஸ்க் ட்ரைவ் போன்றவை சந்தையில் இருந்தாலும் விலை அதிகமென்பதால் வீட்டு உபயோகத்திற்கு அதிகமாக வரவில்லை.
சிடி ட்ரைவ்:
ப்ளாப்பிக்கு கிட்டத்தட்ட சீப்பான மாற்றாக சிடி வந்துள்ளது. சாதாரண சிடி 675MB வரை கொள்ளும், விலையும் மிகக் குறைவு. வீட்டில் உபயோகிக்கும் சிடி ட்ரைவ்கள் சிடி-ரோம் ட்ரைவ்கள், அதாவது சிடியைப் படிக்க மட்டுமே முடியும் எழுத முடியாது. சிடியும் கூட ஒரு முறை எழுதினால் அழித்து எழுத முடியாது. ஆகவே ப்ரோக்ராம்களை விற்க வசதியான சாதனமாக உள்ளது. சினிமாக்களால் சிடியை அனைவரும் தற்போது அறிந்துள்ளனர்.
சிடி-ரோம் மட்டுமல்ல CD-W, CD-RW போன்ற வகைகளும் உள்ளன. CD-W(rite) ட்ரைவ் சிடியை எழுத உபயோகிக்கலாம். CD-RW (Rewrite) ட்ரைவில் சிடியை அழித்து மீண்டும் எழுதலாம். இதில் உபயோகிக்கும் சிடி சற்று வித்தியாசமானது, ஆனால் சாதாரண சிடி-ரோம் ட்ரைவில் உபயோகிக்க முடியும்.
மோடம்:
கம்ப்யூட்டரை டெலிபோனுடன் இணைக்கும் சாதனம். இதில் மற்ற பேக்ஸ் சாதனங்களுக்கு கம்ப்யூட்டரிலுள்ள பக்கங்களை பேக்ஸாக அனுப்பவும், பேக்ஸ் சாதனங்கள் அனுப்பும் பக்கத்தை பெறவும் முடியும். இண்டர்நெட் வீட்டிற்கு வரும் வழி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment